Breaking News

இஸ்ரேலின் நடவடிக்கையால் கோபத்தில் ஐ.நா, அமெரிக்கா, பிரிட்டன் ?

0 0

இஸ்ரேலின் நடவடிக்கையால் கோபத்தில் இருக்கும் ஐ.நா, அமெரிக்கா, பிரிட்டன் – என்ன நடந்தது?

29 அக்டோபர் 2024

பாலத்தீன அகதிகளுக்கான ஐக்கிய நாடுகளின் நிவாரண முகமை (United Nations Relief and Works Agency for Palestine Refugees in the Near East – UNRWA) இஸ்ரேலில், செயல்படத் தடைவிதிக்கும் மசோதாவை நிறைவேற்றி இஸ்ரேல் நாடாளுமன்றம் வாக்களித்துள்ளது.

இந்த மசோதா சட்டமாக இயற்றப்பட்டால், UNRWA மூன்று மாதங்களுக்குள் இஸ்ரேல் மற்றும் இஸ்ரேலிய ஆக்கிரமிப்பில் இருக்கும் கிழக்கு ஜெருசலேமில் அதன் செயல்பாடுகளை நிறுத்திக்கொள்ள வேண்டும்.

பாலத்தீன அகதிகளுக்கான ஐக்கிய நாடுகளின் நிவாரண முகமை பாலத்தீன அகதிகளுக்காகச் செயல்படுகிறது. இந்தச் சட்டம் நடைமுறைக்கு வந்தவுடன், UNRWA ஊழியர்கள் இஸ்ரேல் அதிகாரிகளுடன் தொடர்பை இழக்க நேரிடும்.

இதனால், காஸா மற்றும் இஸ்ரேல் ஆக்கிரமிப்பில் உள்ள மேற்குக் கரையில் இந்த அமைப்பின் செயல்பாடுகள் குறையக்கூடும்.

இஸ்ரேல் படைகள் காஸாவில் உள்ள அனைத்து பகுதிகளையும் கட்டுப்படுத்துகின்றன. இதனால், போர் பாதிப்பு ஏற்பட்டுள்ள பகுதிகளுக்கு உதவிப் பொருட்களை வழங்குவதற்கு UNRWA-வுக்கு இஸ்ரேல் ராணுவத்தின் ஒத்துழைப்பு அவசியம் தேவைப்படுகிறது.

இந்தப் பகுதிகளில் களத்தில் பணிபுரியும் ஐ.நா-வின் முக்கிய அமைப்பாக UNRWA இருக்கிறது.

இந்தச் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்ட பிறகு, இஸ்ரேலில் உள்ள UNRWA பணியாளர்களுக்கான சட்டப்பாதுகாப்பு முடிவுக்கு வரும். மேலும் கிழக்கு ஜெருசலேமில் உள்ள இந்த அமைப்பின் தலைமை அலுவலகமும் மூடப்படும்.

ஐ.நா பொதுச்செயலாளர் என்ன சொன்னார்?

இஸ்ரேல் நாடாளுமன்றத்தின் இந்த முடிவுக்குப் பிறகு, “இந்தச் சட்டம் இஸ்ரேல்-பாலத்தீன போருக்கான தீர்வு, மற்றும் அந்தப் பகுதியின் அமைதி, பாதுகாப்பிற்கு தீங்கு விளைவிப்பதாக இருக்கும்,” என்று ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ் கூறியுள்ளார்.

இந்த முடிவு பாலத்தீனர்களின் பிரச்னையை அதிகரிக்கவே செய்யும் என்று UNRWA தலைவர் பிலிப் லஸ்ஸரினி தெரிவித்துள்ளார்.

எதிர்ப்பு தெரிவிக்கும் அமெரிக்கா, பிரிட்டன்

அமெரிக்கா, பிரிட்டன், ஜெர்மனி உள்ளிட்டப் பல நாடுகள், இஸ்ரேலின் இந்த முடிவு குறித்துக் கவலை தெரிவித்துள்ளன.

இது ‘முற்றிலும் தவறான நடவடிக்கை’ என பிரிட்டன் வெளியுறவுத்துறை அமைச்சர் டேவிட் லாமி தெரிவித்துள்ளார். அதேசமயம், இச்சட்டம் பாலதீனர்களுக்கு முக்கியமான UNRWA-வின் பணியைச் செய்வதைத் தடுக்கிறது என்று பிரிட்டன் பிரதமர் கியர் ஸ்டார்மர் கூறினார். அதே நேரத்தில், காஸாவில் நடக்கும் சர்வதேச மனிதாபிமான முயற்சிகளும் ஆபத்திற்கு உள்ளாகும்.

காஸா பகுதியில் மனிதாபிமான உதவிகளை வழங்குவதில் UNRWA மிகவும் ‘முக்கியப்’ பங்காற்றிவருகிறது என்று அமெரிக்க வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது. இங்குள்ள அனைத்து பகுதிகளிலிருந்தும் சுமார் 20 லட்சம் பேர் இந்த அமைப்பின் உதவி மற்றும் சேவைகளை நம்பி உள்ளனர்.

“இந்தச் சட்டத்தை அமல்படுத்த வேண்டாம் என்று இஸ்ரேலுக்கு வேண்டுகோள் விடுக்கிறோம். அதை நிறைவேற்றவேண்டாம் என்று அவர்களிடம் கேட்டுக்கொள்கிறோம்,” என்று அமெரிக்க வெளியுறவுத்துறைச் செய்தித் தொடர்பாளர் மேத்யூ மில்லர் கூறுகிறார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %