Breaking News

விஜய் தி.மு.க-வை எதிர்ப்பதால் அ.தி.மு.க வாக்கு வங்கியைக் குறி வைக்கிறாரா?

0 0

அரசியலில் தீவிரமாகக் களமிறங்கியிருக்கும் நடிகர் விஜய், தனது சித்தாந்த எதிரியாக பா.ஜ.க-வையும் அரசியல் எதிரியாக தி.மு.க-வையும் முன்னிறுத்தியிருக்கிறார். இதன்மூலம் அவர் யாருடைய வாக்கு வங்கியைக் குறிவைக்கிறார்?

28 அக்டோபர் 2024

ஞாயிற்றுக்கிழமையன்று (அக்டோபர் 27) விக்கிரவாண்டியில் நடந்த விஜய்யின் கட்சியான தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாட்டில் பேசிய, தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், தனது கட்சியின் அடிப்படைக் கொள்கைகளை அறிவித்ததோடு, தமிழக அரசியல் களத்தில் தனது எதிரிகள் யார் என்பதையும் சுட்டிக்காட்டினார்.

” ‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்’ என்று சொன்னபோதே நாம் நம் எதிரியை முடிவுசெய்துவிட்டோம். நாட்டைப் பாழ்படுத்தும் பிளவுவாத அரசியல் செய்வோர்தான் தமிழக வெற்றிக் கழகத்தின் கொள்கை ரீதியான முதல் எதிரி,” என்றார்.

மேலும், “திராவிட மாடல் ஆட்சி என்று பெரியார், அண்ணா பெயரை வைத்து தமிழ்நாட்டைச் சுரண்டிக் கொள்ளையடிக்கும் ஒரு குடும்ப சுயநலக் கூட்டம்தான் அடுத்த எதிரி,” என்று குறிப்பிட்டார்.

தி.மு.க., பா.ஜ.க., எதிர்ப்பு வாக்குகள்

விஜய் தனது உரையில், எந்தக் கட்சியின் பெயரைச் சொல்லியும் தங்கள் கட்சிக்கு எதிரியாக சுட்டிக்காட்டவில்லையென்றாலும் தேசிய அளவில் ஆளும் கட்சியான பா.ஜ.க-வையும் மாநிலத்தில் ஆட்சியில் உள்ள தி.மு.க-வையும்தான் எதிரியாகக் குறிப்பிடுகிறார் என்பது பொதுவான புரிதலாக இருக்கிறது. ஆகவே, 2026-ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில், இந்த இரு கட்சிக்கும் எதிரான ஒரு கூட்டணியையே அவர் அமைக்கக்கூடும்.

தமிழ்நாட்டில் மிகச் சமீபத்தில் நடந்த தேர்தலான நாடாளுமன்றத் தேர்தலில் தி.மு.க. கூட்டணி 46.97% வாக்குகளையும் அ.தி.மு.க. கூட்டணி 23.05% வாக்குகளையும் பா.ஜ.க. கூட்டணி 18.28% வாக்குகளையும் நாம் தமிழர் கட்சி 8.2% வாக்குகளையும் பெற்றன.

இதற்குச் சில ஆண்டுகளுக்கு முன்பு நடந்த சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க. கூட்டணி 45.38% வாக்குகளையும் அ.தி.மு.க-பா.ஜ.க. கூட்டணி 39.71% வாக்குகளையும் பெற்றது. நாம் தமிழர் கட்சி 6.58% வாக்குகளைப் பெற்றன.

இப்போது பா.ஜ.க-வையும் தி.மு.க-வையும் அவர் எதிரியாக முன்னிறுத்துவதால் இந்த இரு கட்சிகளின் எதிர்ப்பு வாக்குகளையும் அவர் குறிவைக்கக்கூடும். ஆனால், தி.மு.க-வின் எதிர்ப்பு வாக்குகளின் ஒரு பகுதி பா.ஜ.க-வுக்கும் பா.ஜ.க. எதிர்ப்பு வாக்குகளின் ஒரு பகுதி தி.மு.க-வுக்கும் செல்லும் நிலையில், இந்த இரு எதிர்ப்பு வாக்குகளில் எந்த அளவு தமிழக வெற்றிக் கழகத்திற்கு கிடைக்கும் என்பது தற்போதைக்கு ஒரு புதிர்தான்.

அ.தி.மு.க-வின் வாக்கு வங்கியைக் குறிவைக்கிறாரா?

மூத்த பத்திரிகையாளரான ஆழி செந்தில்நாதன், “இதுபோல வாக்கு எண்ணிக்கைக் கணக்குகளைப் பேசுவது மூன்று, நான்கு தேர்தல்களிலாவது போட்டியிட்ட அரசியல் கட்சிகளுக்குத்தான் பொருந்தும்,” என்றார்.

“தி.மு.க எதிர்ப்பு வாக்குகள், பா.ஜ.க எதிர்ப்பு வாக்குகளை ஒரு கட்சி பெறுமா என்று விவாதிப்பதற்கு அந்தக் கட்சிக்கு அடிப்படையிலேயே ஒரு பலம் இருக்க வேண்டும். தமிழக வெற்றிக் கழகம் போன்ற புதிய கட்சிகளைப் பொறுத்தவரை அவர்களது சொந்த செல்வாக்கு எவ்வளவு என்பதுதான் முக்கியமான கேள்வி. விஜயின் சொந்த பலம் என்பது அவருடைய ரசிகர் மன்றங்கள்தான். அவை எவ்வளவு பெரியவை, அவற்றின் வாக்கு வங்கி சதவீதம் என்ன என்பதெல்லாம் இப்போது யாருக்கும் தெரியாது,” என்கிறார் ஆழி செந்தில்நாதன்.

விஜய் தி.மு.க. எதிர்ப்பு வாக்குகளைக் குறிவைத்தால், அவை ஏற்கனவே அ.தி.மு.க., பா.ஜ.க., நாம் தமிழர் கட்சிகளிடையே பிரிந்து கிடக்கும் நிலையில், அவருக்கான வாக்குகள் எங்கிருந்து வரும் எனக் கேள்வியெழுப்புகிறார் அவர்.

தமிழ்நாட்டில் ஏற்கனவே உள்ள எந்தக் கட்சியையும் பிடிக்காதவர்கள் எல்லா தேர்தல்களிலும் ஒரு குறிப்பிட்ட சதவீதம் பேர் இருப்பார்கள். அவர்கள், புதிதாகத் தோன்றும் கட்சிகளுக்கு வாக்களிப்பார்கள்.

விஜயகாந்த், சீமான், கமல்ஹாசன் ஆகியோர் பெற்றது இந்த வாக்குகளைத்தான் என்று குறிப்பிடும் செந்தில்நாதன், “ஆனால், ஆட்சியைப் பிடிக்க இது போதாது என்பதை கட்சி நடத்தி விஜயகாந்த், சீமான், கமல் ஆகியோரும், கட்சியே துவங்காமல் ரஜினியும் புரிந்துகொண்டனர்,” என்கிறார்.

ஆனால், விஜய் மாநாட்டில் அ.தி.மு.க., குறித்து மௌனமாக இருப்பதும் தி.மு.க., எதிர்ப்பை முன்வைப்பதையும் பார்த்தால் அவர் அ.தி.மு.க-வின் வாக்கு வங்கியையே குறிவைப்பதாகத் தோன்றுகிறது என்கிறார் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் பொதுச் செயலாளர் து. ரவிக்குமார்.

‘அவ்வளவு எளிதான காரியமல்ல’

மேலும் பேசிய ரவிக்குமார், “விஜய்யைப் பொறுத்தவரை அடிப்படையில் புதிய வாக்காளர்கள், முதல் முறை வாக்காளர்களை ஈர்ப்பார். அதனைத் தவிர்த்துப் பார்த்தால், பா.ஜ.க-வை லேசாக விமர்சனம் செய்கிறார். தி.மு.க., மீது கடுமையான விமர்சனத்தை முன்வைக்கிறார்,” என்கிறார்.

“அதே நேரம், அவர் அ.தி.மு.க-வைப் பற்றியே பேசாமல் இருப்பது, அக்கட்சியைக் குறிவைக்கிறார் என்று காட்டுகிறது. தவிர, அ.தி.மு.க-வின் அடிப்படையான வாக்கு வங்கி, சினிமா கவர்ச்சியில் இருந்து உருவானது. அதன் காரணமாகவும் விஜய் அந்த இடத்தை குறிவைக்கலாம்,” என்கிறார்.

“ஆனால், அது அவ்வளவு எளிதான காரியமல்ல. அ.தி.மு.க., சற்று பலவீனமடைந்திருந்தாலும் அக்கட்சியை, அக்கட்சியின் கட்டமைப்பை எளிதாக வீழ்த்திவிட முடியும் என்று தோன்றவில்லை,” என்கிறார் ரவிக்குமார்.

தமிழ்நாட்டில் சினிமாவில் இருந்து அரசியலுக்கு வந்து கட்சி துவங்கி, தாக்கத்தை ஏற்படுத்திய அரசியல் தலைவர்களில் எம்.ஜி.ராமச்சந்திரனும் அவரால் துவங்கப்பட்ட அ.தி.மு.க-வுமே தற்போதுவரை வெற்றிகரமான உதாரணங்களாக இருக்கிறார்கள்.

1970-களின் துவக்கம்வரை தி.மு.க. vs காங்கிரஸ் என இருந்த களம், அ.தி.மு.க. தொடங்கப்பட்ட பிறகு, 1970-களின் மத்தியில் தி.மு.க. vs அ.தி.மு.க. என மாறியது. 1972-ஆம் ஆண்டு துவங்கப்பட்ட அ.தி.மு.க. முதன்முதலாகப் போட்டியிட்ட 1977-ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் 33.5% வாக்குகளைப் பெற்று, ஆட்சியைப் பிடித்தது.

மற்றக் கட்சிகளால் இந்த வெற்றியை நெருங்கக்கூட முடியவில்லை. 2005-ஆம் ஆண்டில் கட்சி ஆரம்பித்து, 2006-ஆம் ஆண்டில் சட்டமன்றத் தேர்தலில் முதன்முதலாகப் போட்டியிட்ட தே.மு.தி.க., அந்தத் தேர்தலில் 8.4% வாக்குகளைப் பெற்றது. அதற்கு அடுத்த தேர்தலில் 10.29% வாக்குகளைப் பெற்றது. அதற்குப் பிறகு, அ.தி.மு.க. கூட்டணியுடன்தான் எதிர்க்கட்சித் தலைவர் பதவியைப் பிடித்தது.

‘விஜய்க்கான வாக்குகள் எங்கிருந்து வரும்?’

2018-ஆம் ஆண்டு மக்கள் நீதி மய்யம் கட்சியைத் தொடங்கிய கமல்ஹாசன், முதன்முதலில் போட்டியிட்ட 2019-ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் 3.67% வாக்குகளையே பெற்றார். 2021 சட்டமன்றத் தேர்தலில் சில கட்சிகளுடன் கூட்டணி அமைத்தும் அவருடைய வாக்கு வங்கி சுமார் 3% வாக்குகளாகக் குறைந்தது.

“தமிழ்நாட்டில் தி.மு.க-வை வீழ்த்த விரும்புவோர் அதனைத் தோற்கடிக்க அ.தி.மு.க-வைத் தவிர யாருக்கும் வாக்களிக்க மாட்டார்கள். இந்த இரு கட்சிகளையும் பிடிக்காதவர்கள் தற்போது பா.ஜக., நாம் தமிழர் கட்சிக்கு வாக்களித்து வருகிறார்கள். இதில் உங்கள் இடம் என்ன என்பதுதான் கேள்வி,” என்கிறார் செந்தில்நாதன்.

இதே கருத்தை எதிரொலிக்கிறார் ரவிக்குமார். “தமிழ்நாட்டில் தி.மு.க., அ.தி.மு.க., ஆகிய இரு கட்சிகளுக்கும் வாக்களிக்க விரும்பாதவர்கள் சுமார் 15% சதவீதம் பேர் இருப்பார்கள். இந்த 15%-த்தில் பெரும் பகுதி தி.மு.க., எதிர்ப்பு வாக்குகளாகத்தான் இருக்கும். சீமானுடைய வாக்குகள், இந்த 15%-திலிருந்து வருபவைதான். விஜய்க்கான வாக்குகள் எங்கிருந்து வரும் என்பதைப் பார்க்க வேண்டும்,” என்கிறார் அவர்.

‘ஆட்சியில் பங்கு’ – வி.சி.க-வின் பதில்

அதேபோல, தங்களுடைய கட்சி தனித்து ஆட்சியைப் பிடித்தாலும் தம்முடன் வருவோருக்கு அதிகாரத்தில் பங்களிப்புத் தரப்படும் என்று குறிப்பிட்டார் விஜய்.

“கட்சியின் துவக்க கட்டத்திலேயே கூட்டணி எனப் பேசுவது, அவருக்கு தனித்து ஆட்சிக்கு வரும் நம்பிக்கை இல்லை, அல்லது நீண்ட காலம் காத்திருக்க விருப்பமில்லை என்பதைக் காட்டுவதாகத் தோன்றுகிறது,” என்று குறிப்பிடும் ரவிக்குமார், இதன் காரணமாக ஆட்சியில் பங்கு, அதிகாரத்தில் பங்கு எனக் குரல் எழுப்பிய விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, விஜயுடன் கூட்டணி அமைக்குமா எனக் கேள்வி எழுப்புவது மிக மோசமான ஒரு பார்வை என்கிறார்.

“ஆட்சியில் பங்கு, அதிகாரத்தில் பங்கு என விஜய் பேசிய உடனேயே விடுதலைச் சிறுத்தைகள் கட்சி அங்கு சென்றுவிடும் எனப் பேசுவது ஒரு சாதீயப் பார்வை என நினைக்கிறேன். இது எங்களுக்குப் பெரும் ஆத்திரமூட்டுகிறது,” என்கிறார்.

“யார் ஆட்சியில் பங்கு கொடுத்தாலும் அங்கு போகிறோம் என்று நாங்கள் சொல்லிக் கொண்டிருக்கிறோமா? எங்களுக்கு என ஒரு கொள்கை இருக்கிறது. இந்தியாவில் ஒரு சித்தாந்தத்தை முன்வைத்து, அந்தத் திசையில் தொடர்ந்து தீவிரமாகச் செயல்படும் கட்சி வி.சி.க. மட்டும்தான்,” என்கிறார்.

“ஆட்சியில் பங்கு, அதிகாரத்தில் பங்கு என்பதை எல்லாக் கட்சியும்தான் சொல்கிறார்கள். காங்கிரசில்கூட சில தலைவர்கள் பேசினார்கள். அந்தக் கட்சிகளைப் பார்த்து ஏன் இப்படிச் சொல்வதில்லை. ஆட்சியில் பங்கு, அதிகாரத்தில் பங்கு என்று விஜய் சொன்னவுடன் திருமா அவரைச் சந்தித்து, அவருக்கு ஆதரவு தருவார் என நினைப்பது மிக மோசமான பார்வை. இது விடுதலைச் சிறுத்தைகளை அசிங்கப்படுத்தும் பார்வை,” என்கிறார் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் பொதுச் செயலாளர் து. ரவிக்குமார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %